Sunday, April 5, 2009

தேர்தல் நேர அறிக்கை

மாநிலக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளுக்கு மக்களவைத் தேர்தலில் பெரிய முக்கியத்துவம் எதுவும் இல்லாமல் இருந்த காலம் மலையேறிவிட்டது. கடந்த 20 ஆண்டுகளாக மத்திய அரசை நிர்ணயிக்கும் சக்தியாகவும் அங்கம் வகிக்கும் நிலையிலும் பல மாநிலக் கட்சிகள் இருந்து வருகின்றன. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசின் முக்கிய அங்கமாக திமுக தொடர்கிறது. இந்த நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கை என்பது மக்களவைத் தேர்தலில் அந்தக் கட்சி பல தேசியப் பிரச்னைகளிலும் மாநிலப் பிரச்னைகளிலும் எடுக்க இருக்கும் நிலைப்பாட்டின் பிரதிபலிப்பாக இருக்கும் என்று கருத இடமிருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அமைச்சரவையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளில் திமுக அங்கம் வகித்த பின்னும் பல முக்கியமான மாநிலப் பிரச்னைகள் இன்னும் தீர்க்கப்படாமலேயே தொடர்கின்றன என்பதை புத்திசாலித்தனமாக மறைக்கும் ஒரு தேர்தல் அறிக்கையைத் தயாரித்திருக்கும் திமுக தலைமையின் அரசியல் சாதுர்யத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது. நதிநீர் இணைப்பு, கங்கை - காவிரி இணைப்பு என்று நடக்க வேண்டிய பல விஷயங்களைப் பற்றி குறிப்பிடும் திமுகவின் தேர்தல் அறிக்கை மூன்று ஆண்டுகளாகியும் நடைமுறைப்படுத்தப்படாத தமிழகத்திற்குச் சாதகமான நடுவர் மன்றத் தீர்ப்பு என்ன ஆயிற்று, எப்போது நிறைவேற்றப்படும் என்று எதையுமே குறிப்பிடாமல் இருப்பது மத்தியில் கூட்டாட்சி அமைந்தும் மாநிலத்திற்கு எந்தவிதப் பயனும் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது.

இலங்கைத் தமிழர் பிரச்னை அரசியலாக்கப்படக்கூடாது என்றும் அரசியல் தீர்வுதான் ஒரே வழி என்றும் திமுக தேர்தல் அறிக்கை கூறுகிறது. மத்திய அரசின் நிலைப்பாடுதான் தங்களது நிலைப்பாடு என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள். மத்திய அரசு என்பதே தங்களது அரசுதான் என்பதுபோல பல விஷயங்களில் நடந்துகொள்பவர்கள் இந்த விஷயத்தில்மட்டும் தங்களுக்கு மத்திய அரசு எடுக்கும் முடிவுகளில் எந்தவிதப் பங்கும் இல்லை என்று பட்டும்படாமலும் கூறுவது வேடிக்கையிலும் வேடிக்கை. பிறகு எதற்காக இத்தனை அமைச்சர்கள் மத்திய அரசில் பங்கு பெற வேண்டும் என்று நமக்குப் புரியவில்லை.

மின்வெட்டைப் பற்றியோ தமிழகத்தின் மின்சாரத் தேவையைப் பற்றியோ எதுவுமே தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. அதைப்பற்றி ஞாபகப்படுத்த வேண்டாம் என்று திமுக நினைத்தாலும் மக்கள் நினைக்காமலா இருப்பார்கள்?

வருமான வரி வரம்பு அதிகரிக்கப்பட வேண்டும், பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை அளிக்கப்பட வேண்டும், திருநங்கையர்க்கு நலவாரியம், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்குக் கல்வியில் முழுச் சலுகை, மீனவர்களுக்கு நலவாரியம் என்று பல வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கிறது திமுகவின் தேர்தல் அறிக்கை. மத்திய ஆட்சியில் பங்கு பெற்றாலும் அமைச்சர்களாக இருப்பார்களேயல்லாமல் கொள்கை முடிவுகளை நிர்ணயிக்கும் சக்தி படைத்தவர்களாக இருக்க முடியாதவர்கள் இந்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றப் போகிறார்கள்?

சென்னை, மதுரை, கோவை நகரங்களுக்கிடையில் புல்லட் ரயில்; மாமல்லபுரம்வரை மெட்ரோ; தமிழகத்துக்கு மேலும் ஒரு ரயில் பெட்டித் தொழிற்சாலையின் யூனிட்~ கடந்த பத்து ஆண்டுகளாக கேட்டுப்பெற மறந்துவிட்ட இந்த விஷயங்கள் இப்போது தேர்தல் அறிக்கை தயாரிக்கும்போதாவது நினைவுக்கு வந்ததே, மகிழ்ச்சி.

மத்திய வரி வருவாயில் 60 சதவிகிதம் மாநிலங்களுக்குத் தரப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. அதேபோல, கச்சத்தீவில் தமிழக மீனவர்களின் உரிமை மீட்டுத் தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, மாநில சுயாட்சிக்கு அரசியல் சட்டப்படி அங்கீகாரம் தரப்பட வேண்டும் என்று கோரியிருக்கிறது. அதாவது, மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதை அரசியல் சட்டமாக்க வேண்டும் என்கிறது திமுக.

தேர்தல் அறிக்கையை வாக்காளர்களைக் கவர்வதற்காக மட்டும் பயன்படுத்தாமல், இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் கூட்டணிக்குத்தான் அடுத்தாற்போல அமைய இருக்கும் மத்திய ஆட்சியில் ஆதரவு தருவது என்கிற நிலைப்பாட்டை திமுக எடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

ஆனால் திமுகவைப் பொருத்தவரை, மத்தியில் கூட்டாட்சி என்பது தனது அமைச்சர்களுக்கு வளமான துறைகளைப் பெறுவதற்காகத்தானே தவிர, காவிரி, இலங்கைப் பிரச்னை போன்ற தமிழகத்தின் முக்கியமான பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அல்லவே. இந்தத் தேர்தல் அறிக்கையைப் பார்த்தும் படித்தும் சிந்தித்தும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்கிற நம்பிக்கை திமுக தலைமைக்கு நிறையவே இருக்கிறது...

0 comments:

Post a Comment

| Top ↑ |